Monday 9 September 2019

எதற்காகப் படிக்கிறோம்?

எதற்காகப் படிக்கிறோம்?

எழுத்து ஒரு குறியீடுதான் (Symbol) பொதுவாகவும் சரி குறிப்பாகவும் சரி. எழுதுவதைப் பிறர் படிக்க வேண்டும்;பிறர் புரிந்துகொள்ள வேண்டும். இந்தப் பொறுப்புணர்வு அந்தக் குறியீட்டுக்கு உண்டு.
            நாலு பேருக்கு ஒரு விஷயத்தைச் சொல்ல வருமுன் அதில் கேட்கிறவர் ரசிக்கும்படி, அவருக்குப் பயன்படும் படி என்ன இருக்கிறது என்று யோசித்துவிட்டு எழுதுகிற எழுத்து ஒரு நிறைவு தருகிறது. படிக்கிறவரைப் போலவே எழுதுகிறவருக்கும் ஒரு திருப்தி வருகிறது.
            அப்படிப் படிப்பில் இடைவிடாத ஈடுபாடு கொண்ட ஒரு வாசகர், ஒரு புத்தகத்தை மற்றொருவருக்குச் சிபாரிசு செய்கிறார். ஒரு சந்ததி மற்றொரு சந்ததிக்குச் சிபாரிசு செய்கிறது. இப்படிப் பல நூற்றாண்டுகள் ஓடுகின்றன. அப்புறமும் குறிப்பிட்ட அதே நூல் ஒருவரால் மற்றவருக்குச் சிபாரிசு செய்யப்பட்டே வருகிறது.
            அந்த எழுத்து காலத்தை வென்றது என்கிறோம். உதாரணமாக கம்பர், திருவள்ளுவர், ஷேக்ஸ்பியர், டால்ஸ்டாய், பாரதி, புதுமைப்பித்தன் இவர்கள் எழுதியது இலக்கியம். மற்றவை?
            இலக்கியமல்ல என்று ஒருவர் கூறுகிறார். அந்த வாசகர் ரசனைத் தேர்ச்சியுள்ளவர் என்று மக்கள் ஒரு மதிப்பு வைத்து ஏற்கிறார்கள்.முன் சொன்ன சில எழுத்துக்கள் மட்டுமின்றி மீதியுள்ள பலவும் இலக்கியம்தான் என்று மற்றொரு குரல் எழுகிறது. அது ஒரு விவகாரமாகி, ஒரு விவாதம் பிறக்கிறது.
            எழுதுவோர் படிப்போர் என்ற இருதரப்பினருக்கும் இடையே தோன்றும் மூன்றாவது நபர் ஒருவர் தன் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப ஒரு கட்சி கட்டுகிறார். இடையில் ஒரு சலனத்தை ஏற்படுத்தி மக்கள் பார்வையைத் தன்மீது விழச் செய்கிறார்.
     இன்று  இலக்கியத்தின் மீது ஈடுபாடு என்பது அதை வைத்துக்கொண்டு என்ன சம்பாதிக்கலாம், எப்படி புத்தகம் வெளியிட்டு நாலு காசு செலவுசெய்தாவது ஒரு மதிப்பை ஈட்டலாம் நோட்ஸ் போடலாம், சாஹித்ய அகாடெமி விருது அல்லது ஞானபீடம்,உச்சபட்சமாக நோபல் பரிசு,அடுத்து மேன் புக்கர் பரிசு, இவ்வளவு மட்டுமே!

தற்போது கவிதை அல்லது கதை எழுத வருவோரின் ஒரே குறிக்கோளும் கண்ணோட்டமுமே  சினிமா அல்லது சின்னத்திரையில் தலைகாட்டி புகழ் வாங்கலாம் என்பதே! எழுத வருகிறார்கள்; இலக்கிய மறுமலர்ச்சி செய்வதாகக் காலர் தூக்கிக்கொண்டு. சினிமாக்காரன் வசனம் எழுத வாய்ப்புக்கொடுத்தால் வாலை ஆட்டிக்கொண்டு ஒரே ஓட்டம் ஓடிவிடுகிறார்கள்.ஆற்றிலும் ஒரு கால் இருக்கவேண்டும்;சேற்றிலும் ஒரு கால் இருக்கவேண்டும். ஜெயித்தால் ஆறு. ஜெயிக்க முடியாவிட்டால் சேறு 
எப்படியும் நமக்கு ஒரு குழு வேண்டும்.ஒருவருக்கு ஒருவர் உதவியாக. நீ என்னைச் சொறிந்து விடு, நான் உன்னைச்சொறிந்துவிடுகிறேன். சொறிந்துகொள்வோர்களுக்கு நிதி உதவி செய்து பரிசு கொடுப்போரைக் கண்டுபிடிப்போம்.இந்த விரிநீர் வியனுலகத்தில் நிதிக்கு அலையும் வாலாட்டிகளுக்கா பஞ்சம்?வரிப்பேய் விழுங்குவதைக் காட்டிலும் அரிப்பு நீக்கும் சொரிப்பேய்களுக்கு  வழங்கி வள்ளல் ஆகலாமே என்று எண்ணும் காசுள்ள கும்பல் இருக்கவே இருக்கிறது !அவர்களைக் கைக்குள் போட ஒரு குழு வேண்டும்.
     இந்த மனப்போக்கு நிகழ்கால கமர்ஷியல் உலகில் தீவிரமாக நிலவும்போது உலகத்தோடு ஒட்ட ஒழுகிடவேண்டும். அப்படி இப்படி அட்ஜஸ்ட் செய்துகொள்ளவேண்டும் என்று காம்ப்ரமைஸ் செய்துகொண்டால்  இருதலைக்கொள்ளி எறும்பாகிவிடுவோம்   
            இதனால் எல்லாம் உண்மை எழுத்தும் நின்று விடுவதில்லை; உண்மைப் படிப்பும் நின்று போவதில்லை. இரண்டும் தொடர்கின்றன. ரசனைத் தேர்ச்சியுடையவர் என்று மதிக்கப்பட்டவர் சொன்ன கருத்துகளுக்கு ஒரு கருத்து மதிப்பு மட்டும் வைத்துவிட்டுச் சமுதாயம் தன்பாட்டுக்கு நடக்கிறது.
            அந்த மூன்றாவது நபர் சொன்ன அல்லது சொல்லாமல் விட்ட எழுத்துக்களை தலைமுறை தலைமுறையாகச் சிபாரிசு செய்துகொண்டே சமுதாயம் போகிறது. படிக்கிறவர்களும் தொடர்ந்து படிக்கிறார்கள்.
            அந்த மூன்றாவது நபர் விமர்சகர் என்று வைத்துக் கொள்வோம். அவர் இதுதான் இலக்கியம் என்று கொண்ட தீர்மானத்திற்கு என்ன அடிப்படை? அவர் நிராகரித்த பல புத்தகங்களை ஏன் மீண்டும் மீண்டும் ஒரு சமுதாயம் படித்துக் கொண்டிருக்கிறது?
            லோகோபின்ன ருசி.    உலகம் எத்தனை பிரிவினதோ, சுவைகள் அத்தனை பிரிவின.
            இந்தச் சுவைகளில் தான் தொட்டதே சிகரம்; தன் முடிவே இறுதித் தீர்ப்பு என்று எந்த விமர்சகரும் கூறிவிட முடியாது.
            முதன் முதலில் திருவல்லிக்கேணியில் குடியேறியவர் அதுவே உயர்வு; திருவல்லிக்கேணி வாசம் மைலாப்பூரிலோ, தி.நகரிலோ, மற்று எவ்விடத்திலோ கிட்டாது. திருவல்லிக்கேணியே உலக வாசஸ்தலங்களின் உன்னத லட்சியம் என்று அவர் அடித்து சாதித்தாலும்கூட ஒவ்வொரு பேட்டையின், ஊரின் இயல்பையும் சுவைத்த ஒருவர் ஒரு மௌனப் புன்னகையோடு அந்தக் கூற்றை ஒதுக்கிவிட்டு நகர்வார்.          எந்த விமர்சன அளவுகோலும் பெருமளவு தன் முகமானது(personal) (தன் சுவை; தன் விருப்பு வெறுப்பு இவை சார்ந்தது. மனிதனுக்கு இயற்கையான தன்முனைப்பு (ego ) ஓரளவேனும் கலந்தது.
            எனவே அந்த விமர்சகர் சொன்னதைச் சரியென முற்றிலும் ஏற்று ஒரு புத்தகத்தை அங்கீகரிப்பதோ நிராகரிப்பதோ சரியல்ல.
            ஆனால்-
            நல்ல இலக்கியத்தை ஒருவர் படிக்காமல் போவதால் ஏற்படும் அனுபவ நஷ்டத்தையும், கண்ட கண்ட புத்தகங்களைப் படிப்பதால் ஏற்படும் காலவிரயத்தையும் சோர்வையும் நீக்கவும் தரம் பிரித்துக் காட்டும் ஓர் அளவுகோல் அவசியம்.
            அந்த அளவுகோலும் கூடுமானவரை கட்டுறுதி)யின்றி இருப்பதே அனுபவப் பங்கீட்டுக்கு உதவும்.
            நல்ல இலக்கியத்தை சிபாரிசு செய்கிறபோது மேலெழுந்த வாரியாகவேனும் ஒரு வரையறைக்கு வருவது அனுபவங்களைப் பங்கிடத் துணைபுரியும்.  எந்த இலக்கியத்தையும் கூர்ந்து நோக்கினால் மனிதர்கள் தன் இயல்புகளோடும் இயற்கையோடும் நடத்தும் போராட்டமே அதன் கருப்பொருள் ஆயிருப்பதைக் காணலாம்.

எதற்காக எழுதுகிறார்கள்?


தற்காக  எழுதுகிறார்கள்?

     மகனோடு புணர்ச்சி கொள்ளும் தாய்,கைம்பெண்ணாக ஒரு பள்ளியில் பணிபுரியவந்து ஒருவனிடம் சிக்கி அவனைப் பித்துப்பிடிக்க வைத்துவிட்டு ஆள்மாற்றும் இப்பெண்களின் தாய்,பெண்ணுரிமை பேசி,உறுப்புப்பெயர்கள் எழுதி கவனம் கவரும் கவித்துவம், சிக்கினான் ஆண் என்று ஆணினத்தைக் கிழி கிழி -என்று கிழிக்கிற சாக்கில் ஆபாசங்களுக்கு இடம் தேடும் பெண்முழக்கம், பிள்ளை இல்லாக்குறையைபோக்கிக்கொள்ள  ஒரு குறிப்பிட்ட திருநாளில் கூடும் கும்பலில் எவனோ ஒருவனோடு வெளிப்படையாகக் கூடி, அதன் பின் ஏற்படும் மகத்தான சமூக மாற்றங்களை விவரித்து
வந்தவன் வந்துகொண்டே இருந்தான்,
போனவன் போய்க்கொண்டே இருந்தான்.
வந்தவன் நிழல் போனவன் நிழலைத்
துரத்திக்கொண்டே போகையில் புழல்..
நிழல் மறைந்து விட்டது
-என்ற ரீதியில் செங்கல் அடுக்கிக் காட்டி அதற்கு ஒரு இயத்தின் பெயர் சூட்டி இலக்கியம் எனக்கொண்டாடி, ஒரு குழு சேர்த்துக்கொண்டு அடிக்கும் தம்பட்டம், போதாக்குறைக்கு  ஒளி பரவ உதித்த ஒரு இலக்கிய ஏந்தல் நினைவைப்போற்றி புகழ ஒரு படக்கண்காட்சி, ஒரு போற்றித் திருவகவல்  என்ற கதிக்கு வந்து சேர்ந்திருக்கிற நவீன தமிழ்ப் புத்திலக்கியத்திற்கு என்ன நேர்ந்தது என்று கவலை உதிக்கிறது.      ஒருவேளை இலக்கியம் என்பதே இதற்காகத்தானோ என்று ஐயுறும் அளவு இவற்றின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும்போது நமக்கு அறிவிக்கப்பட்ட ஞானோபதேசம் குறுக்கிடுகிறது வாழ்க்கை எப்படிப் பல முகங்கள் கொண்டதோ அவ்வாறே வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் இலக்கியமும் பல முகங்கள் கொண்டதாகிறது. இப்படி இப்படி சொல்லிக்கொண்டிருந்தோமே ! சிந்தித்தோமே!
            அறிவும் உணர்வும் கற்பனையும் பெறுகின்ற அனுபவங்கள் பல. இந்த அனுபவப் பங்கீட்டுக்கு இலக்கியமே ஒரு பிரதான வடிகால். என்று ஆசான்கள் வேறு கற்பித்தார்கள்! இப்போது இப்படி நடக்கிறதே! என்ன செய்வது?
            இலக்கியம் ஏன் படைக்கப்படுகிறது? எதற்காக எழுதுகிறார்கள்? இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டியது தான்.பல விடைகள் எழுத்தாளரின் மனப்போக்கிற்கேற்பக் கிடைக்கலாம்.
            சுருக்கமான பதில் ஒன்றுதான்.
            படிப்பதற்காக.
            எதற்காகப் படிக்கிறோம்?
            ஒரு கோணத்தில் இந்தக் கேள்வி அர்த்தமற்றது; மற்றொரு கோணத்தில் அர்த்த புஷ்டியானது. பல நினைவலைகளை எழுப்புவது. நமது பழக்கங்கள். சுவைகள் பற்றிய விவரங்களை நாமே அறிய வாய்ப்பளிப்பது.
            ஏன் வாழ்கிறோம் என்ற கேள்வி எழுந்தால் எத்தனை பதில்கள் வரும்?
            பிறந்து விட்டதற்காக-
            உயிர் வாழ்வு அடிப்படை உணர்வூக்கி-
            பிறர் வாழ்வதைப் பார்த்து-
            ஒரு நோக்கம் கருதி-
            ஒரு வேட்கை காரணமாய்-
            பதில்கள் வேறுபடலாம். அலசினால் மிஞ்சுவது ஒரே முடிவு. நாம் அனைவரும் வாழ்வதை நேகிச்சிறோம். இதே பதில் முந்தையக் கேள்விக்கும் பொருத்தம்.
            படிப்பதை நாம் நேசிக்கிறோம். படிக்கிறோம், இன்பம் அதில் உண்டு. ஒளியும் உண்டு.
            வாழ்வில் நாம் பெறும் துன்ப அனுபவங்களை-எண்ணற்ற தொல்லைகளை-வாழ்க்கை வழங்கும் இன்ற அனுபவங்களுக்காகச் சகித்துக் கொள்கிறோம்.
            இன்பமும் உண்டு. இன்பமும் வரும்; அப்போது குறைகள் தீர்ந்த ஒரு நிறைவு நிச்சயம். இந்த நம்பிக்கையில் தான் மனித குலத்தின் இடையறாத பயணம் தொடர்கிறது.
            அந்தப் பயண அனுபவங்களை ஒருவர் பங்கிட பிறர் கேட்பது ஓர் பேரனுபவமாகிறது. மக்கள் படித்துக் கொண்டே இருக்கிறார்கள். கல், சுவர், ஓலைச்சுவடி, காகிதம், திரை எதில் எழுதினாலும் படித்துக்கொண்டே வருகிறார்கள். காலம் காலமாக.

Monday 28 January 2013

விதிகளின் தொடர்ச்சி


விதிகளின் தொடர்ச்சி 
விதி : 25
1) இதில் ஒவ்வொருவருக்கும் தம்முடைய மற்றும் தம் குடும்பத்தின் சுகாதாரத்துக்கும் நலவாழ்விற்கும் தேவையான வாழ்க்கைத் தரத்தை அமைத்துக்கொள்ளும் உரிமை உண்டு.
இதில் உணவு, உடை, வீட்டுவசதி, மருத்துவ வசதி மற்றும் தேவையான சமூக வேலைகள் இவை அடங்கும்.
மேலும் வேலை இல்லாமல் போகும் காலத்திற்கு வேண்டிய பாதுகாப்பு, நோய், உடல் ஊனம், வைத்தியம் முதிர் வயது அல்லது இவை போன்ற தம் கட்டுப்பாட்டை மீற வேரிடும் சூழல்களால் வாழ வழி அற்றுப்போகும் நிலை ஆகியவற்றுக்கும் பாதுகாப்பு பெற உரிமையும் உண்டு.
2) தாய்மைப் பருவமும், குழந்தைப் பருவமும் விசேஷ கவனத்திற்கு உரியனவாகும். திருமண பந்தத்தினாலோ அல்லது அதை மீறியோ பிறக்கின்ற எல்லாக் குழந்தைகளும் ஒரே விதமான சமூகப் பாதுகாப்பைப் பெறவேண்டும்.
விதி : 26
1) ஒவ்வொருவருக்கும் கல்விபெறும் உரிமை உண்டு. கல்வி, குறைந்தபட்சம் தொடக்க நிலைகளிலோ அடிப்படைக் கட்டங்களிலோ இலவசமாக்கப்படவேண்டும்.
தொழில் நுட்பம் மற்றும் தொழில் துறைக் கல்வி பொதுவாக அனைவருக்கும் கிட்டுவதாக அமையவேண்டும். உயர் மட்டக் கல்வித்தகுதி அடிப்படையில் சமமான முறையில் அனைவருக்கும் கிட்டவேண்டும்.
2) மனித ஆளுமையை வளர்க்கவும், மனித உரிமைகளையும் அடிப்படைச் சுதந்திரங்களையும் மதிக்கும்படியான முறையில் கல்விநெறிப்படுத்தப்பட வேண்டும். அனைத்து நாடுகள், இனங்கள் அல்லது மதக் குழுக்களிடையே புரிந்துகொள்ளுதல், பொறுமை, நட்பு ஆகிய பண்புகளைக் கல்வி வளர்க்கவேண்டும். சமாதானத்தை நிலைநிறுத்த ஐ.நா. சபை மேற்கொள்ளும் செயல்பாடுகளுக்குக் கல்வி உறுதுணையாக இருக்கவேண்டும்.
3) தங்கள் குழந்தைகளுக்கு எந்த வகையான கல்வியைத் தரவேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் முன்னுரிமை பெற்றோர்களுக்கு உண்டு.
விதி : 27
1) சமுதாயத்தில் கலாச்சார வாழ்வில் பங்குபெறவும், கலைகளை அனுபவிக்கவும் அறிவியல் முன்னேற்றங்களில் பங்கேற்கவும் அதன் பலன்களை அனுபவிக்கவும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.
2) ஏதேனும் ஓர் அறிவியல், இலக்கியம் அல்லது கலைப் படைப்பிற்கு ஒருவர் உரியவராகும் பட்சத்தில் அவருக்கு அதிலிருந்து கிடைக்கும் தார்மீக மற்றும் பொருளாதார நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உண்டு.
விதி : 28
இந்தப் பிரகடனத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட உரிமைகளையும் சுதந்திரங்களையும் சமுதாய அளவிலும் சர்வதேச அளவிலும் பெறும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு.
விதி : 29
1) ஒவ்வொருவருக்கும் சமுதாயத்திற்கு ஆற்றவேண்டிய கடமைகள் உண்டு. அவரது சுதந்திரமான ஆளுமை வளர்ச்சி அவற்றை நிறைவேற்றவதன் மூலமே சாத்தியமாகும்.
2) தம் உரிமைகளையும், சுதந்திரங்களையும் நுகர முனையும் ஒவ்வொருவருக்கும் சட்டத்தினால் தீர்மானிக்கப்பட்ட சில எல்லைகள் உண்டு. அவை ஒரு ஜனநாயக சமுதாயத்தின் பொது நலத்திற்கும், நீதிநெறி, பொது ஒழுங்கு ஆகியவற்றின் நியாயமான தேவைகளை ஏற்கவும் அமைந்தவை.
3) இந்த உரிமைகளையும், சுதந்திரங்களையும் எக்காரணத்தை முன்னிட்டும் ஐ.நா. சபையின் நோக்கங்களுக்கும் கொள்கைகளுக்கும் மாறானவற்றுக்குப் பயன்படுத்தக்கூடாது.
விதி : 30
இந்தப் பிரகடனம் வெளியிட்டுள்ள உரிமைகள் மற்றும் சுதந்திரங்களில் ஏதாவது ஒன்றினை அழிக்கும் நோக்கமுள்ள செயலைப் புரியவோ, அல்லது ஒரு நாடு, குழு அல்லது தனி நபர் அத்தகைய அழிவு நடவடிக்கையில் ஈடுபடத் தமக்கு உரிமை இருப்பதாகவோ இதைத் தமக்குச் சாதகமான முறையில் திரித்து உரைக்கக்கூடாது.
மேற்கண்ட இந்தப் பிரகடனம் `மனித உரிமைகளுக்கான சர்வதேச சட்டம்' ஒன்றை இயற்றுவதற்கான முதல்படியாகவே காணப்பட்டது.
1976இல் இந்தச் சட்டம் மூன்று குறிப்பிடத்தக்க ஒப்பந்தங்களை ஏற்று அமலுக்கு வந்தது. அவை வருமாறு :
1) பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளுக்கான சர்வதேச ஒப்பந்தம்.
2) சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச ஒப்பந்தம்.
3) இரண்டாவதாகக் கூறப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்கும் சுயவிருப்பமுள்ள அரசியல் அறிக்கை.
முதலாவது ஒப்பந்தத்தை ஏற்கும் எந்த நாடும் தன் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பொறுப்பை ஏற்கிறது.
அது வேலை செய்யும் உரிமை, நியாயமான கூலி, சமூகப் பாதுகாப்பு, உகந்த வாழ்க்கைத் தரம், பசி பட்டினியிலிருந்து விடுதலை, சுகாதார வசதி, கல்வி ஆகியவற்றுக்கு ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமையை அங்கீகரிக்கிறது.
மேலும், தொழிற் சங்கங்களில் சேரவோ அல்லது அவற்றை அமைக்கவோ ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு என்பதையும் அந்த நாடு அங்கீகரிக்கிறது.
இரண்டாவது ஒப்பந்தத்தை ஏற்கும் எந்த நாடும் தன் மக்களை எந்த ஒரு குரூரமான, மனிதத் தன்மையற்ற, இழிவாக்கும் செயல்களிலிருந்தும் சட்டத்தின்மூலம் கட்டாயம் காப்பாற்ற வேண்டும்.
மேலும், அந்த நாடு ஒவ்வொரு தனி நபருக்கும் உயிர் வாழ்க்கை, சுதந்திரம் பாதுகாப்பு மற்றும் அந்தரங்கம் ஆகியவற்றுக்கு உரிமை உண்டு என்பதையும் தெரிவிக்கிறது.
அடிமைத்தனத்தைச் சட்டவிரோதமாக்கல்; நியாயமான நீதி விசாரணைக்கான உரிமைக்கு உத்தரவாதம் அளித்தல், தன்னிச்சையாக ஒருவரைக் கைதுசெய்தல், காவலில் வைத்தல் ஆகியவை நடந்தால் அவரைப் பாதுகாத்தல் போன்ற அம்சங்களையும் அது ஏற்கிறது.
மூன்றாவதாக சுய விருப்பத்தோடு கூடிய அரசியல் அறிக்கை. ஐ.நா. சபை வெளியிட்ட உரிமைப் பட்டியலிற்கு எதிரான நடவடிக்கைகளில் எவரேனும் ஈடுபட்டால், அதற்கு எதிராகக் குற்றம் சாட்டும் உரிமை தனி நபர்களுக்கும் நாடுகளுக்கும் உண்டு என்பதை நிச்சயிக்கிறது.
மேற்கண்ட ஒப்பந்தங்களை மிகச் சிறந்தவை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அவற்றைச் செயல்படுத்துவதில் பல சங்கடங்கள் உள்ளன.
முதலில் இதை அமலாக்க ஐ.நா.வால் முடியுமா? தார்மீக ரீதியாக வற்புறத்துவதைத் தவிர வேறு நடவடிக்கைகளில் ஈடுபட ஐ.நா.வுக்கு அதிகாரம் இல்லை.
ஒரு நாட்டின் தலைவர் முரட்டுத்தனமாகவும் விடாப்பிடியாகவும் மனித உரிமைகளைச் சிதைத்து வரலாம். ஆனால், அதற்கு எதிராகச் சர்வதேச சமுதாயம் எதையும் செய்ய இயலாது.
ஏனெனில், ஐ.நா. சாசனத்தின் முக்கிய அம்சமே அந்தந்த நாடுகளில் அமைந்துள்ள அரசுகளை மதிக்கவேண்டும் என்பதே. உரிமை கோரும் எந்த ஒரு செயலையும் `அது உள்நாட்டு விஷயத்தில் தலையீடு' என்று எளிதில் திரித்துக் கூறி விடலாம்.
எனவே எது தேவையெனில், சூழ்நிலைக்கு ஏற்ப விரைந்து, ஆற்றலோடு நடவடிக்கை எடுக்கும் வகையில் ஐ.நா. சபையை மாற்றி அமைத்தலே!
மேலும் தேவையாவது ஒன்று, அதிக ஜனநாயகப் பண்புள்ள ஐ.நா. சபை. அது சிறியது, பெரியது, வலியமையானது, பலவீனமானது, பணக்காரர், ஏழை என்ற பாகுபாடின்றி, அடிப்படை மனித உரிமைகளுக்கான முழு ஈடுபாட்டை அனைத்து நாடுகளிடையிலும் ஏற்படுத்த அந்த ஐ.நா. பணியாற்ற வேண்டும்.
ஆக, இவை தேவையெனில் ஐ.நா. சபையையே அடிப்படையில் மாற்றியாக வேண்டும். மாறிவரும் இன்றைய உலகச் சூழலில் இதை ஓர் அவசரப் பணியாகக் கொள்ளவேண்டும்.

மனித உரிமைப் பிரகடனம்


மனித உரிமைப் பிரகடனம்
மனிதனுக்கு அடிப்படியில் உள்ள உரிமைகளை வரையறுத்து விளக்கமாக ஐ.நா.சபை இந்தப் பிரகடனத்தை வெளியிட்டது. அவற்றின் விதிகள் வருமாறு.
விதி : 1
எல்லா மனித ஜீவன்களும் பிறப்பால் சுதந்திரமானவர்களே. கௌரவத்திலும் உரிமைகளிலும் சமமானவர்களே. பகுத்தறிவு, மனச்சாட்சி ஆகிய இரண்டும் வாய்ந்த அவர்கள், ஒருவரோடு ஒருவர் சகோதர உணர்வோடு நடந்துகொள்ள வேண்டும்.
விதி : 2
இந்தப் பிரகடனத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட எல்லா உரிமைகளையும், சுதந்திரங்களையும் ஒவ்வொருவரும் பெறத் தகுதியானவர்களே.
அதில் இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் பேன்ற பிற கருத்துக்கள், தேசிய மற்றும் சமூகத் தோற்ற மூலங்கள், சொத்துரிமை, பிறப்பு அல்லது பிற அந்தஸ்து ஆகிய இவற்றின் காரணமாக எழும் எந்த வேறுபாடும் இருக்கக்கூடாது.
ஒரு நாடு அல்லது ஒரு பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் அதன் அரசியல், பிராந்திய மற்றும் சர்வதேச மதிப்பை வைத்து எந்தப் பாகுபாடும் வழங்கப்பட மாட்டாது.
அந்த நாடு சுதந்திரம் பெற்றதா, கூட்டாட்சி உள்ளதா, சுயாட்சி இல்லாததா அல்லது இதுபோன்ற ஆட்சியுரிமை பற்றிய பிற எந்த வரம்புகளும் இந்த மதிப்பீட்டில் அடங்காது.
விதி : 3
ஒவ்வோரு தனி நபருக்கும் உயிர் வாழ்வு, சுதந்திரம் பாதுகாப்பிற்கான உரிமை உண்டு.
விதி : 4
எவரையும் அடிமைகளாகவோ, கொத்தடிமைகளாகவோ நடத்தக்கூடாது. அடிமை முறையும், அடிமை வியாபாரமும் அவற்றின் எல்லா வடிவங்களிலும் தடைசெய்யப்பட வேண்டும்.
விதி : 5
எவரையும் சித்திரவதைக்கு ஆளாக்கக்கூடாது. குரூரமான, மனிதத் தன்மையற்ற மற்றும் இழிவான முறைகளில் ஒருவரை நடத்தவோ, தண்டிக்கவோ கூடாது.
விதி : 6
எல்லா இடங்களிலும் சட்டத்தின் முன்னால் ஒரு தனி மனிதர் என்ற மதிப்பைப் பெற  ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.
விதி : 7
சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம். சட்டத்தின் சமமான பாதுகாப்பை எவ்வித வேறுபாடும் இன்றிப் பெறும் உரிமை அனைவருக்கும் உண்டு.
இந்தப் பிரகடனத்தை மீறும் எந்த ஒரு பாகுபாட்டிற்கோ அல்லது அத்தகைய பாகுபாட்டைத் தோற்றுவிக்கும் எந்த ஒரு தூண்டுதலுக்கோ எதிராகச் சமமான பாதுகாப்பைப் பெறவும் எல்லோருக்கும் உரிமை உண்டு.
விதி : 8
அரசியலமைப்பின் மூலமோ, சட்டத்தின் மூலமோ வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறும் எந்தச் செயலுக்கும் எதிராக, உரிய தேசிய நீதிமன்றங்களில் நியாயம் பெறுவதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.
விதி : 9
விசாரணையின்றி எந்த நபரையும் கைதுசெய்வதோ, சிறையில் வைப்பதோ, நாடு கடத்துவதோ கூடாது.
விதி : 10
ஒருவரது உரிமைகள் பற்றித் தீர்மானிக்கவும், அவரது கடமைகள் பற்றித் தீர்மானிக்கவும் அல்லது தமக்கு எதிரான எந்தக் குற்றச்சாட்டிற்காகவும் அவர் ஒரு சுதந்திர நீதிமன்றத்தின்முன் நியாயமான பொது விசாரணைக்கு முறையிடலாம். அவர் அதற்கு முழுமையான சமத்துவ உரிமை உடையவராவார்.
விதி : 11
1) ஒரு சட்டபூர்வமான குற்றம் இழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும், தனக்கு  தேவையான பாதுகாப்பை அளிக்கிற முழுஉறுதி தருகின்ற பொது விசாரணை, சட்டபூர்வமாக நடந்து முடியும் வரை, தாம் நிரபராதிதான் என்று கூறிக் கொள்ள உரிமை உண்டு.
2) ஒரு செயலைச் செய்வதற்காகவோ அல்லது செய்ய மறுத்ததற்காகவோ அந்தக் காலத்திய தேசிய அல்லது சர்வதேச சட்டத்தின்கீழ் வராத ஒன்றில் ஈடுபட்டதாக எவர் ஒருவரையும் குற்றவாளி ஆக்கக் கூடாது.
விதி : 12
ஒருவரது அந்தரங்கம், குடும்பம், கடிதப் போக்குவரத்து, இவற்றின்மீது எவரும் தன்னிச்சையாகத் தலையிடக்கூடாது. அவரது கௌரவம் மற்றும் மதிப்பின் மீதும் தாக்குதல் நடத்தக்கூடாது.
அத்தகைய தலையீடு மற்றும் தாக்குதல்கள் ஏற்பட்டால், சட்டபூர்வமான பாதுகாப்பைப் பெறும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு.
விதி : 13
1) ஒவ்வொருவருக்கும் தமது நாட்டின் எல்லைகளுக்குள் பயணம் செய்யும் சுதந்திரமும் வசிக்கும் உரிமையும் உண்டு.
2) ஒவ்வொருவருக்கும் தம் நாடு உள்பட எந்த நாட்டையும் விட்டு வெளியேறவும் தன் நாட்டிற்குத் திரும்பி வரவும் உரிமை உண்டு.
விதி : 14
1) தமக்கு நேரிடம் கொடுமைளில் இருந்து மீளப் புகலிடம் தேடி வேறு நாடுகளுக்குச் செல்லவும், அங்கு தங்கியிருக்கவும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.
2) அரசியல் சார்பற்ற குற்றங்களில் ஈடுபடுவோரோ, ஐ.நா. சபையின் நோக்கங்களுக்கும், கொள்கைகளுக்கும் விரோதமான செயலில் ஈடுபடுவோரோ இந்த உரிமையைக் கோர முடியாது.
விதி : 15
1) ஒரு நாட்டின் குடியுரிமையைப் பெற ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.
2) ஒருவரது குடியுரிமையை எவரும் தன்னிச்சையாகப் பறிக்கக்கூடாது. தமது குடியுரிமையை வேறொரு நாட்டிற்கு அவர் மாற்ற விரும்பினால் அந்தச் சுதந்திரத்தை மறுப்பதும் கூடாது.
விதி : 16
1) மதம், ஒரு நாட்டின் குடியுரிமை, இனம் போன்ற எந்த வரையறையுமின்றி வயது வந்த ஆண்களும், பெண்களும் திருமணம் செய்துகொண்டு ஒரு குடும்பத்தை அமைக்கும் உரிமை உள்ளவர்கள்.
2) திருமணம் முடிவு செய்யும்போதும், திருமணத்தின் போதும், மணமுறிவின் போதும் அவர்களுக்குச் சம உரிமை உண்டு.
3) விரும்புகின்ற ஜோடியினரின் சுதந்திரமான முழு சம்மதத்தின் பேரில் மட்டும்தான் திருமணம் நடக்கலாம்.
4) குடும்பம்தான் சமுதாயத்தின் இயற்கையான அடிப்படைக் குழு அலகு. எனவே, சமுதாயம் மற்றும் அரசாங்கம் இரண்டிலிருந்தும் பாதுகாப்பு பெறும் உரிமை அதற்கு உண்டு.
விதி : 17
1) ஒவ்வொருவருக்கும் தனியாகவோ, பிறருடன் சேர்ந்தோ சொத்து வைத்துக் கொள்ளும் உரிமை உண்டு.
2) தன்னிச்சையாக ஒருவரது சொத்துக்களை எவரும் பறிக்கக் கூடாது.
விதி : 18
ஒவ்வொருவருக்கும் சிந்தனைச் சுதந்திரத்தோடு மனச்சாட்சி, மற்று மதச் சுதந்திரமும் உண்டு.
இந்த உரிமையில் ஒருவர் தம் மதத்தையோ, நம்பிக்கையையோ மாற்றிக்கொள்ளும் அம்சமும் அடங்கும்.
ஒருவருக்குத் தனியாகவும், பிறரோடு ஒன்றுசேர்ந்தும் பகீரங்கமாகவோ, அந்தரங்கமாகவோ தன் மதத்தைப் பரப்பவும், ஒரு போதனைகயில் நம்பிக்கை காட்டவும், ஒன்றை அனுசரிக்கவும், தொழவும் கடைப்பிடிக்கவும் சுதந்திரம் உண்டு.
விதி : 19
ஒரு கருத்தை மேற்கொள்ளவும், அதை வெளியிடவும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. எந்தக் குறுக்கீடும் இன்றி தன் கருத்தை ஒருவர் கடைப்பிடிக்கலாம். பிரதேச எல்லைப் பாகுபாடின்றிச் செய்திகளையும் எண்ணங்களையும் அவர் தேடிச் செல்லவும், பெறவும், வெளியிடவும் உரிமை உண்டு.
விதி : 20
1) சமாதான முறையில் ஒன்று கூடவும், சங்கம் அமைக்கவும் ஒவ்வொருவருக்கும் சுதந்திரமான உரிமை உண்டு.
2) ஒரு சங்கத்திலோ, கூட்டத்திலோ சேரவேண்டும் என்று எவரும் எவரையும் கட்டாயப்படுத்தக் கூடாது.
விதி : 21
1) ஒவ்வொருவருக்கும் தானே நேரடியாகவும் அல்லது சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலமாகவும், தன் நாடடின் அரசாங்கத்தில் பங்கேற்கும் உரிமை உண்டு.
2) தன் நாட்டின் பொதுச் சேவையில் பங்கேற்கவும் ஒருவருக்கும் உரிமை உண்டு.
3) மக்களின் தீர்மானம்தான் அரசாங்கத்தின் அடிப்டை அதிகாரமாகும். இந்தத் தீர்மானம் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடைபெறும் உண்மையான தேர்தலின் அடிப்படையில் வெளியிடப்பட வேண்டும்.
நடக்கும் தேர்தலில் பொதுவாகவும், சமமான வாக்குரிமைக்கு வாக்குறுதி அளிப்பதாகவும், ரகசிய வாக்களிப்பு முறையிலோ அல்லது அதற்கு இணையான, சுதந்திரமான வாக்களிப்பு முறைகளை அனுசரித்தோ நடைபெற வேண்டும்.
விதி : 22
ஒவ்வொருவருக்கும் சமுதாயத்தில் ஓர் உறுப்பினர் என்ற வகையில் சமூகப் பாதுகாப்புக்கு உரிமை உண்டு.
ஒவ்வொருவருக்கும் நமது கௌரவத்திறகும், தம் ஆளுமையின் சுதந்திரமான வளர்ச்சிக்கும் தேவையான பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகள் உண்டு.
அவை அந்தந்த நாட்டின் அமைப்பு மற்றும் வளங்களுக்கு ஏற்புடையதாகவும், தேசிய முயற்சி மற்றும் சர்வதேசக் கூட்டுறவின் மூலம் பெறத்தக்கதாகவும் அமையும்.
விதி : 23
1) ஒவ்வொருவருக்கும் வேலைசெய்யும் உரிமை உண்டு. அவ்வாறே வேலையைத் தேர்ந்து எடுக்கும் சுதந்திரமும் உண்டு. நியாயமானதும், ஏற்கத்தக்கதுமான சூழல்களில் வேலைசெய்யும், வேலையின்மைக்கு எதிரான பாதுகாப்பைப் பெறவும் சுதந்திரம் உண்டு.
2) எந்த வேறுபாடும் இன்றி, செய்யும் சமமான வேலைக்கேற்ற, சமமான சம்பளம் பெற ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.
3) வேலைசெய்யும் ஒவ்வொருவருக்கும், நியாயமான ஏற்கத்தக்க ஊதியம் பெறும் உரிமையுண்டு. எந்த ஊதியம் அவரையும் அவரது குடும்பத்தையும் காப்பதுடன், அவரது மனித கௌவரத்திற்கு மதிப்பளிப்பதாகவும் தேவைப்பட்டால் சமூகப் பாதுகாப்பினால் அது உறுதிசெய்யக் கூடியதாகவும் அமையவேண்டும்.
4) தனது நலன்களுக்காகத் தொழிற் சங்கங்களை அமைக்கவும், அதில் சேரவும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.
விதி : 24
ஒவ்வொருவருக்கும் ஓய்வெடுக்கவும் விடுமுறை பெறவும் உரிமை உண்டு. இதில் நியாயமான அளவிலான வேலை நேரம், சம்பளத்துடன் கூடிய காலாந்தர விடுமுறை இவை அடங்கும்.[தொடரும்]

சுதந்திரக் கொள்கை,சோஷலிச சிந்தனை,மூன்றாவது உலகச் சிந்தனை


சுதந்திரக் கொள்கை,சோஷலிச சிந்தனை,மூன்றாவது உலகச் சிந்தனை
சுதந்திரக் கொள்கை
சுதந்திரக் கொள்கை உருவானது மேற்கித்திய நாடுகளில்தான். அது படிப்படியாகப் பல கட்ட வளர்ச்சி பெற்றது.
பண்டைய ஐரோப்பாவிலும், இடைக்கால ஐரோப்பாவிலும் நீதியும் உரிமைகளும் சில விசேஷப் பிரிவினருக்கு மட்டுமே என்று ஒதுக்கப்பட்டிருந்தன.
நிலப் பிரபுக்கள்,  குறுநில மன்னர்கள், அடிமைகளை வைத்திருந்த சுதந்திரக் குடிமக்கள் இவர்கள்தான் நீதியும் உரிமைகளும் கோரக் தகுதி உள்ளவர்கள் என்று மதிக்கப்பட்டனர்.
சாதாரணப் பொதுமக்களுக்கு எந்த விதமான உரிமையும் கிடையாது. அவர்கள் தங்கள் எஜமானர்களின் விருப்பு வெறுப்பிற்கு அடிபணிந்து, சார்ந்து வாழ்பவர்களாகவே இருந்தனர்.
தனி நபர் சுதந்திரத்தை ஏற்றுக்கொண்ட முதலாவது சட்ட விதிகள் லியான் அரசின் மன்னன் ஒன்பதாவது அல்போன்ஸாவின் காலத்தில்தான் தோன்றியது.
பிரபுக்கள் சபையில் இளவரசர்களுக்கும் நிலப் பிரபுக்களுக்கும் இடையே ஏற்பட்ட சமரச ஒப்பந்தம்தான் அது.
குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஒழுங்கான நீதி விசாரணை நடத்தவேண்டும். ஒருவரது உயிர், மானம், வீடு, சொத்து இவற்றைப் பறிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. இவை உள்ளிட்ட வரிசையான உரிமைகள் சட்ட விதிகளாயின.
இத்தகைய ஒப்பந்தங்களில் மிகவும் புகழ் வாய்ந்தது, `மாக்ன கார்டா' என்று அழைக்கப்பட்ட `மகா சாசனம்'தான்.
இது 1215இல் இங்கிலாந்தில் மன்னர் ஜான், தம் நிலப் பிரபுக்களின் நிர்ப்பந்தத்தால் வழங்கிய ஒப்பந்த உரிமை.
உரிமைகள், சுதந்திரங்கள் இப்படி எல்லாவற்றையும் உறுதிசெய்யும் நோக்கத்தினால் அது தோன்றவில்லை. என்றாலும் தனி நபர் சுதந்திரம் என்ற கருத்திற்கு அதுவே முதல் வடிவம் தந்தது. அடுத்த பல நூற்றாண்டுகளுக்குத் தனி நபர் சுதந்திரத்தின் சின்னமாக அதுவே விளங்கியது.
மகா சாசனத்தின் 39வது பிரிவு, எந்தச் சுதந்திர மனிதனும் அவனது சமகால மக்களின் சட்டபூர்வமான தீர்ப்பு மற்றும் நாட்டின் சட்டத்தினால் தவிர, வேறு எவராலும் சிறையில் அடைக்கப்படவோ, நாடு கடத்தப்படவோ, எந்த வகையிலும் அழிக்கப்படவோ கூடாது என்று அறிவிக்கிறது.
மனித உரிமைகளின் வரலாற்றில் ஒரு புதிய கட்டம் 17வது நூற்றாண்டில்தான் தொடங்கிற்று. தாமஸ் ஹாப்பென், ஜான் லாக், ழீன் ழக்கே ரூஸ்ஸோ முதலிய தத்துவ அறிஞர்களும் அரசியல்வாதிகளும்தான் அதைத் தோற்றுவித்தனர்.
எல்லா வகுப்பைச் சேர்ந்த மக்களுக்கும் மனித உரிமைகள் உண்டு என்று அவர்கள் நிலைநாட்டினர்.
அதன் பின்தான் தனி நபருக்கும், மனித உரிமைகளுக்கும் இடையே ஒரு புதிய பார்வை எழுந்தது.
சுதந்திரத்திற்கான உரிமை, மனச்சாட்சி சுதந்திரம். பேச்சுரிமை முதலிய உரிமைகள் வெள்ளோட்டம் விடப்பட்டன. இந்தக் காலக்கட்டத்தில்தான் முக்கிய விளைவுகள் குறித்த பல பிரகடனங்கள் தோன்றின.
1689இல் ஆங்கிலேய உரிமை மசோதா அமலுக்கு வந்தது. இது சுதந்திரமானதும் அடிக்கடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட வேண்டியதுமான பாராளுமன்றத்தின் சட்ட ஆட்சியை வலிபுறுத்தியது.
  1776இல் சுதந்திரத்திற்கான அமெரிக்கப் பிரகடனம் மனிதனின் அடிப்படை உரிமைகளை வகுத்தது. இதில் சுயாட்சியும் அடங்கும்.
மாறுபட முடியாத சில உண்மைகள்
எல்லா மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டவர்கள்
இறைவனால் அவர்களுக்குச் சில நீக்கமுடியாத உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
அவற்றில் வாழ்க்கை, சுதந்திரம், மகிழ்ச்சியைத் தேடுதல் ஆகியன அடங்கும்.
இந்த உரிமைகளைப் பாதுகாக்கவே ஆளப்படுவோரின் இசைவின் பேரில் நியாயமான அதிகாரம் பெற்று அரசாங்கங்கள் அமைகின்றன.
1789இல் மனிதனின் உரிமைகள் குறித்து பிரான்ஸில் வெளியான பிரகடனம் மனிதனின் இயற்கையான, பிரிக்க முடியாத புனித உரிமைகள் எனச் சிலவற்றை வகுத்தது.
அவை சுதந்திரம், சொத்துரிமை, பாதுகாப்பு, அடக்குமுறைக்கு எதிர்ப்பு என்பனவாகும்.
 சோஷலிச சிந்தனை
இந்தச் சிந்தனை மரபு, சோஷலிச நாடுகளில்தான் முக்கியமாக உருவாகியது. இது தனி மனிதன் மற்றும் சமுதாயத்தின் சுதந்திரப் பார்வைக்கும் சவால் விட்டது.
இதனால் மனித உரிமைகளைப் புரிந்துகொள்வதில் ஒரு மாபெரும் மாற்றம் தோன்றியது.
சுதந்திரச் சிந்தனை என்பது தனி மனிதர்களையே மையமாகக்கொண்டது. அது அரசியல் மற்றும் சிவில் உரிமைகளை வலியுறுத்தியது.
ஆனால், சோஷலிச சிந்தனை தனி நபரின் சுதந்திரத்திற்குப் பதில் எல்லோருடைய சமத்துவத்திலும் கவனம் திருப்பியது.
மக்களின் சமுதாய உரிமைகளோ, பொருளாதார உரிமைகளோ பாதிக்கப்படுமேயானால், அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் நிலைநிற்க முடியாது என்ற சோஷலிச சிந்தனை வாதாடியது.
சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதிகளுக்குத் தனி நபர் சுதந்திரம் பங்கம் விளைவிக்கக்கூடாது, பசித்த வயிறுகளோடு மக்கள் தெரு ஓரங்களில் வசிக்கும்போது தனிநபர் சுதந்திரத்தைப் பற்றிப் பேசி என்ன பயன்?
உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு, செய்ய ஒரு வேலை, சுகாதாரத் தேவை, கல்வி முதலிய அடிப்படை யதார்த்தங்களோடு ஒப்பிடுகையில், அந்தச் சுதந்திரம் ஓர் ஆடம்பரம்போல் காணப்படுகிறது.
இவற்றைச் சாதிக்க சமத்துவ சிந்தனைக்கே கவனம் திரும்பவேண்டும். எந்த அரசும் தன் மக்களின் சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கைமீது மேலும் அதிகமாக ஆக்கபூர்வமான பங்கு ஏற்கவேண்டும்.
 இதையே சோஷலிச சிந்தனை வலியுறுத்துகிறது.
 மூன்றாவது உலகச் சிந்தனை
சோஷலிச அணி, முதலாளித்துவ அணி என்ற இரு பிரிவுகளிலும் சேராத இந்தியா போன்ற கோஷ்டி சேராத நாடுகளை மூன்றாவது உலகம் என்று அழைக்கிறோம்.
இவை சோஷலிச சிந்தனை வலியுறுத்தும் சமூகப் பொருளாதார உரிமைகளோடு, கலாச்சார உரிமைகளுக்கே முதலிடம் வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அந்நிய ஆதிக்கத்தின் பிடியில்  சிக்கியிருந்து விடுபட்ட இவை, இப்படிக் கோருவதற்கு ஒரு மூலக் காரணம் உண்டு.
ஆட்சி உரிமை மட்டுமே அந்நியர் கையிலிருந்து மாறியது. ஆனால் சமூகப் போக்கிலும், பொருளாதாரத் துறையிலும் அவர்கள் மறைமுகமாகவும் தந்திரமாகவும் தம் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருகின்றனர்.
இந்த மூன்றாம் உலக நாடுகள் சுய வளர்ச்சி, சுய தீர்மானம் இவற்றை மேற்கொள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் ஆற்றல் வழங்கவேண்டும் என்று வாதிடுகின்றன.
எந்த ஒரு நாட்டு மக்களின் மீதும் அந்நிய கலாச்சாரமோ, அதன் வாழ்க்கை முறையோ சுமத்தப்படுவது, அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். இவ்வாறே அவை கணக்கிடப்பட வேண்டும். இதுவே மூன்றாம் உலகின் வாதமாகும்.
7.21. ஐ.நா.வின் மனித உரிமைப் பிரகடனம்
1948இல் ஐ.நா. சபை வெளியிட்ட பிரகடனம் இது. நவீன உலக வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனையை இது அறிவிக்கிறது.
இது மனித உரிமைகளைப் பற்றி முதலாளித்துவ நாடுகள், சோஷலிச நாடுகள், மூன்றாம்  உலக நாடுகள் ஆகிய யாவும் கூறும் கருத்துக்களையும் இணைக்கும் சமரச முயற்சிதான்.
இருந்தாலும் இது ஒரு புதிய மனித சமுதாயத்திற்கான பார்வையை அளிக்கிறது. எனவே, எல்லாக் காலத்திற்குமான மனித உரிமைச் சாசனம் என இதை அழைக்கலாம்.
இதற்கு முன்பாக 1945இல் ஐ.நா. வெளியிட்ட சாசனம் மனித உரிமைகளையும், அடிப்படைச் சுதந்திரங்களையும் பாதுகாத்து வளர்ப்பதையே ஜ.நா.வின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என அறிவித்தது.
அது அடிப்படை மனித உரிமைகளில் நம்பிக்கை., தனி நபரின் கௌரவம் மற்றும் தகுதியில் நம்பிக்கைகளை வெளியிட்டது.
ஆண்களும் பெண்களும் சமம்; நாடுகள் பெரியதாக இருந்தாலும், சிறியதாக இருந்தாலும் சமம் என்று ஏற்றுக்கொண்டது
அதன்பின் 1948 டிசம்பர் 10ஆம் தேதி ஐ.நா.வின் பொதுக்குழுவில் மனித உரிமைகள் பற்றிய பிரகடனம் வெளியிடப்பட்டது. அதற்கு இன்றைய அளவும் உலகம் முழுவதும் விரிவான செல்வாக்கு உள்ளது.
தேசிய மற்றும் சர்வதேச அரசியல் அமைப்புகள், சட்டங்கள் மற்றும் குறிப்பிட்ட பலவகை உரிமைகள் குறித்த சம்பிரதாயங்கள் இவற்றில் எல்லாம் மனித உரிமைப் பிரகடனம் வெளியிட்ட கருத்துக்கள் நீக்கமற நிறைந்துள்ளன.
ஒரு புதிய உலகை அமைக்க விரும்புவோர் ஒவ்வொருவருக்கும் இது பயன்படும். இந்த நம்பிக்கையில் அவற்றின் முழு வடிவத்தையும் தொடரந்து தருகிறோம்.

அன்பும் நீதியும்


அன்பும் நீதியும்

அன்பு நீதிக்கு உயிரூட்டுகிறது. நீதியைத் தூண்டுவதாக இருக்கிறது. நீதியைக் கண்டுபிடிக்கிறது, சீர்படுத்துகிறது, எளிமையை உயர்த்துகிறது. அதைக் கடந்து நிற்கிறது.அன்பு நீதியைத் தவிர்ப்பதில்லை. அதை உறிஞ்சிக் கொள்வதில்லை. அவ்வாறே அன்பு நீதியை வேறொன்றால் இட்டு நிரப்புவதில்லை. மாறாக அதற்கு முதலிடம் தருகிறது. நீதிக்கு அன்பு குரல் கொடுக்கிறது.ஏனெனில், அன்பு, உண்மை, தர்ம சிந்தனை என்பவை நீதியின்றி நிலைத்திருக்காது.
- இரண்டாவது போப் ஜான்பால்

ஒவ்வொரு சமூக அமைப்பின் நாடியாகவும் நீதியே இருக்கவேண்டும் என்று கண்டோம். அதற்கும் மேலே சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
ஒருவரோடு ஒருவரை நாம் அன்பினால் பிணைக்க வேண்டும். அப்போதுதான் உலகம் ஓர் உண்மையான மனிதகுடும்பமாக மாறும்.
எல்லா மனித உறவுகளையும் மிக ஆழமாக ஊடுருவி இருக்கும் சக்தி அன்பே.
இதை நாம் கட்டாயம் உணரவேண்டும். அன்புதான் எல்லா ஒழுக்கத்திற்கும் முழுமையான அஸ்திவாரம். அதுவே நீதியின் அடிப்படைக் கொள்கை.
கிரேக்கர்கள் மாபெரும் அறிவாளிகளாக இருந்தும் அதை உணரவில்லை. அவர்கள் எல்லா நற்பண்புகளுக்கும் நீதியே அரசி என்று கருதினார். மனிதனின் உணர்வுகளில் அன்பும் ஒன்று என்று கணக்கிட்டனர்.
அன்பு, நீதி இரண்டுமே மனித உறவுகளோடு தொடர்புள்ளவை. ஆனால் அன்புதான் உண்மையிலேயே நெருக்கமானது.
தனி நபர்களும், சமுதாயங்களும் வைத்திருக்கும் உடமைகளையும் அதை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் என்றும் நீதி பேசுகிறது.
ஆனால் அன்புதான் நெருக்கமான முறையில் உறவுகளைப் பற்றிப் பேசுகிறது. மனங்களும் இதயங்களும் ஒன்றுசேர்வதைப் பற்றி அது குறிப்பிடுகிறது.
தனி நபர்களிடையே உள்ள உறவு அன்பினால்தான் முதலில் மிகவும் ஆழமாகத் தொடப்படுகிறது. அதற்கு அப்புறம்தான் நீதி வருகிறது.
நீதியும் அன்பும் ஒன்றோடொன்று தொடர்புள்ளவை. அதில் சந்தேகமில்லை. நீதி நியாயமான அன்பு காட்டுவது என்பது முடியாது.
நீதி என்பது அன்பின் விதியை அமலாக்கத் தேவையான குறைந்தபட்ச அளவைச் சுட்டிக்காட்டுகிறது. நீதியின் கோரிக்கை ஒருவர் செய்கிற தர்மத்தின் அளவினால் நிறைந்துவிடாது.
எது ஒருவருக்கு நியாயமாக உரியது என்று நீதி கருதுகிறதோ, அதை ஒருவர் அன்பினால் மற்றவருக்கு மனமுவந்து அளிப்பதற்கு இணையாக்க முடியாது.
எங்கே நீதி இல்லையே, அங்கே உண்மை அன்பும் இருக்கமுடியாது. ஆனால் அன்பு நீதியையும் கடந்து செல்கிறது. அன்பினால்தான் நீதி தன் உள்ளார்ந்த முழுமையை அடைகிறது.
அன்பு இல்லாத நீதி வறண்டது, மாமூலானது. அது விலகி நின்றுவிடும். எனவே, அன்பும் நீதியும் ஒருங்கிணைந்து செல்லவேண்டும்.
அன்பு நீதிக்குத் தூண்டுகோலாக வேண்டும். நீதி அன்புக்கு வழிகாட்ட வேண்டும்.
அன்பும் நீதியும்
*மனிதர்களுக்கு நீதியைவிட அடிப்படைத் தேவையானது அன்புதான்.
*நீதி நிறைவேறியுள்ளது என்று அன்புதான் முழு உத்தரவாதம் அளிக்கிறது. அவ்வாறே நீதியின் தோல்வி, அன்பின் தோல்வியைச் சுட்டிக்காட்டுகிறது.
*நீதியின் குறிக்கோள்கள், அன்பு என்ற உள்ளுணர்வால்தான் எட்டக் கூடியவை.
*அன்பே நீதிக்குத் தெளிவான பார்வை அளிக்கிறது. முழு விரிவாக்கம் தருகிறது.
*அன்போடு செயலாற்றும் ஒருவன், நீதியின் குறைந்தபட்சத் தேவைகளை முதன்மையாகக் கொள்ளாமல், சமுதாயத்தில் தம்முடன் வாழ்பவரின் உண்மைத் தேவைகளையே முதன்மையாகக் கொள்கிறான்.
*மற்றொருவரின் நலனுக்காகத் தன் சொந்த உரிமைகளை விட்டுக் கொடுக்க அன்பு எப்போதும் தயாராக இருக்கிறது. அவை சமுதாயத்திற்கோ, ஒரு தனி நபருக்கோ எந்தப் பாதகமுமின்றி விட்டுக் கொடுக்க வேண்டியவை என்றே அன்பு கருதுகிறது.

. நீதியும் மனித உரிமையும்

சமூக நீதியின் முதலாவது கொள்கையே ஒரு மனிதருக்கு அவர் மனிதர் என்ற முறையில் மதிப்புக் கொடுப்பதுதான்.
அதற்குத் தெளிவான பொருள் - மனித உயிர் என்ற வகையில் ஒருவருக்குரிய வேறுபடுத்த முடியாத உரிமைகளை இனம் காண்பதும், அதைப் பாதுகாப்பதும்தான்.
எனவே, சமூக நீதி என்பதை மனித உயிர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது என்ற கோணத்தில்தான் அணுகவேண்டும்.
மனித உரிமைகள் என்பவை இன்று பெரிதும் அலசப்படும் விஷயம் ஆகிவிட்டது. சமூக வாழ்வில் மனித உரிமைகளுக்கு அளிக்கப்படும் மதிப்புதான் மையமாக இருக்கவேண்டும். இப்படி இன்று வாழ்வின் எல்லாத் துறை மக்களிடமிருந்தும் முழக்கங்கள் எழத் தொடங்கிவிட்டன.
ஆனால், என்றும் உலகின் எல்லா நாடுகளிலும் மனித உரிமைகள் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகின்றன, மீறப்படுகின்றன.
மனித உரிமைகள் மீறப்படுவதை எவ்வாறு தடுப்பது?
தங்களுடைய அடிப்படை உரிமைகள் என்னவென்று மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தாமல், அவர்களுக்கு அதைக் கற்பிக்காமல் அது எப்படிச் சாத்தியம்? முதலில் செய்யவேண்டிய கடமை அதுவே.
அந்த உரிமைகள் மறுக்கப்படும்போது எதிர்த்துப் போராடும் வலிமையை அவர்களிடையே உருவாக்கவேண்டும்.
மனித உரிமைகளைப் பாதுகாப்பதுதான் இன்றைய முக்கியமான சமூகப் பிரச்சனை.
மனித உரிமைகள் என்ற கருத்து எவ்வகையிலும் எளிமையான ஒன்றோ, நேரடியாகச் சொல்லக்கூடிய ஒன்றோ அல்ல. மனித உரிமைகள் என்னவென்று புரிந்துகொள்ளும் உணர்வு படிப்படியாக மாறி வந்திருக்கிறது, மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கிறது. இன்றும்கூட அது, சமுதாயத்திற்குச் சமுதாயம், குழுவுக்குக் குழு வேறுபடுகிறது.
சில நேரங்களில் மனித உரிமைகள் என்ற கருத்தே சுதந்திரமாகத் திரித்துக் கூறப்படுகிறது. சர்வாதிகாரிகள் தாங்களே தொடர்ந்து பதவியில் இருக்கவேண்டும் என்பதற்காக அதைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
சில அரசாங்கங்கள் ஒன்றும் அறியாத அப்பாவி மக்களை, மனித உரிமைகளின் பேரால் ஒழித்துக் கட்டியுள்ளன, சித்திரவதை செய்திருக்கின்றன.
பண பலம் படைத்தவர்கள் தங்கள் சுயநலங்களைப் பாதுகாக்கவும், ஏழைகளைச் சுரண்டவும் மனித உரிமைகளை வஞ்சித்து இருக்கிறார்கள்.வஞ்சித்தும் வருகிறார்கள்.

நடைமுறை வாதமும் நியாய உணர்வும்


நடைமுறை வாதமும்  நியாய உணர்வும்

சென்ற பதிவில்  கண்ட கருத்தோட்டங்களுடன்  புதிய சில கருத்தோட்டங்களைக் காண்போம் .அவற்றில் முக்கியமானது நடைமுறைவாதம்.
நடைமுறை வாதம்
`ஒழுக்கம் என்பதை எங்கும் எப்போதும் எல்லோருக்கும் ஒரே விதமாகப் பொருந்துவது என்று பார்க்கக்கூடாது' என்று நடைமுறைவாதிகள் கூறுகின்றனர்.
அது காலத்திற்கேற்ப வளரும், மாறும். எந்தக் காலத்திற்கு எது பொருந்துதோ அதுதான் சரியான ஒழுக்கம்.
சௌகரியமானது, காலத்திற்கு ஏற்றது இவைதான் நீதியின் அஸ்திவாரம் என்கிறார்கள் இவர்கள்.
ஒரு தனி நபரோ, நாடோ செய்யும் செயல்கள் சமுதாயத்தின் தேவைகளை நிறைவேற்றுகின்றனவா? அதனால் மனித உயிர்களின் துன்பம் குறைகின்றதா? ஆம் என்றால்  அவைதான் நியாயமானவை.
நீதி, அநீதி என்பது எல்லாம் ஒரு சமுதாயம் தீர்மானிப்பதுதான். ஒரு காலத்தில் ஒரு சமுதாயத்திற்கு நியாயமாகத் தோன்றுகிறது  அதே சமுதாயத்திற்கு மற்றொரு சமயம் நியாயமற்றதாக மாறுகிறது .
நீதியின் அர்த்தங்கள் இடத்திற்கு இடம், காலத்திற்குக் காலம் மாறும். பழைய ஆடைகள் போலவும் கிழிந்தவை போலவும் அவை அகற்றப்படும்.
எனவே, நீதி என்பதே முழுமைபெற்ற லட்சியம் அல்ல. தெளிவான நிர்ணயம் ஆகாது. மிக உயர்ந்த பண்பும் ஆகிவிடாது.
நடைமுறை வாதம் இப்படி வளர்கிறது. இந்த வகையான சிந்தனை நீதியை மிகவும் கொச்சைப்படுத்துவதாகும் . நீதி என்பது பச்சோந்தித் தன்மை கொண்டது அல்ல.அது தொடர்ந்து நிறம் மாற்றிக் கொள்வதில்லை. நீதி என்பது உலகில் என்றென்றும் நின்று நிலவி வரும் ஒரு நிலையான ஒழுங்கைக் குறிப்பிடுகிறது.
உலக மதிப்பீடு என்ற ஒன்று உண்டு. அந்த மதிப்பீடு எந்த அளவு காரிய சாத்தியமானது, எவ்வளவு உபயோகமானது என்ற எல்லைக்கும் அப்பால் தன்னளவில் அது அர்த்தமுடையது.
மனித ஜீவன்கள் என்ற முறையில் எது சௌகரியமானதோ, அதை மட்டுமே நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டு மற்றதை வேலைக்கு உதவாது என்று தள்ளி வைத்து விடு வதில்லை.
ஒரு போக்கினால்  எவ்வளவு பாதகம் நேர்ந்தாலும் நீதிக்காக நாம் எதிர்நீச்சல் போடுகிறோம்.அதுவே மனித சுபாவத்தின் அடிப்படையாகும். அதைக்கொண்டே எல்லா மதிப்பீடுகளும் உருவாகின்றன.
அவை முற்றிலும் மாறாதவை. உலகு தழுவியதுமான மதிப்பீடுகள் . நிச்சயம் அவற்றுள் நீதியும் ஒன்று.
 நியாய உணர்வே நீதி
ஜான் ரால்ஸ் என்பவரால் முன்வைக்கப்பட்ட கருத்து இது. எல்லா மனித உயிர்களும் சமம் என்ற கொள்கைகளோடு இது தொடங்குகிறது.
எல்லோருக்கும் பேச்சுரிமை உண்டு. ஒழுக்கமும் பகுத்தறிவும் உள்ள ஜீவன்கள் என்ற அடிப்படையில் எது நல்லது, எது நீதி என்று தீர்மானிக்கும் சுதந்திரமும் அனைவருக்கும் உண்டு.
ஆனால் அதே சமயம் சமூகத்தில் நிச்சயம் சில ஏற்றத்தாழ்வுகளும் உண்டு. சிலருக்கு அதிகத் திறமைகள் உள்ளன. சிலருக்கு அவை இல்லை.
சிலர் அதிகப் பணம், சொத்துக்கள், அந்தஸ்து, ஆற்றல் படைத்தவர்களாக இருக்கிறார்கள். அவற்றுக்கு ஒரே காரணம் அந்தச் சலுகைகளோடு அவர்கள் பிறந்துள்ளனர்.
இந்த ஏற்றத்தாழ்வுகள் இயற்கையான உண்மைகள். எந்தச் சமுதாயத்திலும் எப்போதும் அவை இருந்து வரும். அவற்றை அகற்றவேண்டியது அவசியமில்லை.
இந்த ஏற்றத்தாழ்வுகளை எல்லோருக்கும் உகந்த விதத்தில், குறிப்பாக வசதியற்றவர்களுக்கு ஏற்றவாறு ஒழுங்குபடுத்துவதே நீதியாகும்.
வாய்ப்புகளில்கூட சமத்துவம் தேவை. சமூகத்தில் உள்ள அலுவலகங்களில் நுழையும் அந்தஸ்துகள் அனைவருக்கும் திறந்துவிடப்படவேண்டும். தகுதி ஒன்றை மட்டுமே அதற்காகக் கணக்கில் எடுக்கவேண்டும். இதுவே ஜா ரால்ஸின் கருத்து.
இந்தக் கண்ணோட்டம் கவர்ச்சிகரமாக உள்ளது. ஆனால் இது மக்களின் இயற்கை உரிமைகளை ஒதுக்கிவிட்டு சட்டம் இயற்றுவோரின் சட்டமுறைக்கு ஏற்ப நீதி அமைய வேண்டும் என்கிறது.
நீதி என்பது சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதற்கான சட்டத்தின் பொறுப்பாகிறது. சட்டம் இயற்றுவோரின் திறமையில்தான் நீதி அடங்கியுள்ளது.
ஏற்றத்தாழ்வுகள் தவிர்க்க முடியாதவைதான். ஆனால் சரிப்படுத்தக் கூடியவை. ஏன் அப்படிச் செய்யவேண்டும்? ஏன் ஒருவர் நியாயமாக நடந்துகொள்ளவேண்டும்? இந்தக் கேள்விகளையே இவர் பொருட்படுத்த வில்லை.
 மனித மதிப்பீடு
இன்று பெரும்பாலான மக்கள் முழுமனதோடு ஏற்கும் நீதியின் மற்றொரு அஸ்திவாரத்தை இனி காணலாம்.
எல்லா மனிதர்களையும் நாம் நியாயமாக நடத்தவேண்டியது அவசியம். காரணம் ஒவ்வொரு மனித ஜீவனும் ஒரு தனி நபர்.
ஒரு மனிதர் என்ற முறையில் அவருக்கு அழிக்கமுடியாத ஒரு பெருமை உண்டு. எனவே அவர் மரியாதைக்குரியவர். நீதி என்பது ஒவ்வொருவரது பிறப்புரிமை.
மனித மதிப்பீடு என்பதில் தனித்துவம், சுயேச்சை இவை இரண்டும் அடங்கம். எனவே அந்த அடிப்படையில் ஒரு மனிதருக்குரிய மரியாதை என்பது அவருக்குரிய சுதந்திரத்தை மதிப்பதாகும்.
தன் வாழ்வை எப்படி உருவாக்கிக் கொள்வது? எப்படித் தன் மகிழ்ச்சியைத் தேடிச் செல்வது என்று தீர்மானிக்கும் ஆற்றலே சுதந்திரம் என்படும்.
அது சுய தீர்மானத்துக்கு ஒருவர் வரும் ஆற்றலைக் குறிக்கிறது. ஆனால் மனித சுதந்திரம் என்பது முழுமையானதல்ல. அது பிறரைச் சார்ந்தது. அது பொதுநலத்தால் வரையறுக்கப்படுவது.
இந்த மதிப்பீட்டில் தனி நபருக்குரிய சுதந்திரம் முற்றிலும் ஒதுக்கிவிடப்படுவதில்லை. அத்தியாவசியமாகத் தேவையென்றால் ஒழிய முடிவெடுக்கும் உரிமையைச் சிலரிடமே விட்டுவிடக்கூடாது.
தங்கள் சொந்த வாழ்க்கைக்கு முடிந்த அளவு மக்களையே பொறுப்பேற்க அனுமதிக்க வேண்டும்.
பிறரையே மையமாகக்கொள்வது இதன் இரண்டாவது குறிக்கோள். இயற்கையிலேயே நாம் சமூக ஜீவிகள்.
பிறருக்காகவும் பிறரோடும் வாழவே நாம் விதிக்கப்பட்டிருக்கிறோம். தனி நபர் என்ற முறையில் ஒருவர் பெற்றுள்ள அழிக்கமுடியாத மதிப்பு பிறர் ஏற்பவை. எனவே பிறரால் வரையறுக்கப்படுபவை.
எனவே, தனி நபர் வாதம் என்பது ஒழுக்க ரீதியாகப் பார்த்தால் பொறுப்பு வாய்ந்தது. அதாவது ஒவ்வொருவருக்கும் அளிக்கப்படும் பெருமையானது, நான் பிறருடைய பெருமைகளை மதிக்கிறேனா, அதில் அக்கறை காட்டுகிறனா என்ற கேள்விக்கான பதிலைச் சார்ந்தது.
இது எல்லா மக்களும் அடிப்படையில் சமம் என்ற கொள்கையை நிறுவுகிறது.
தனி நபர்கள் என்ற முறையில் இங்கு எஜமானர்களும் இல்லை; அடிமைகளும் இல்லை;. ஏழைகளும் இல்லை; பணக்காரர்களும் இல்லை; உயர்ந்த சாதியும் இல்லை; தாழ்ந்த சாதியும் இல்லை.
அதே சமயம் சமத்துவம் என்றால் அனைவரும் ஒரே தன்மை உடையவர்கள் என்று பொருளல்ல. இது முற்றிலும் இயலாதது.
நாம் அனைவரும் தனி நபர்கள். நாம் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்கள்.
சமத்துவம் தனிப்பட்ட வேற்றுமைகளை மதிக்கிறது. அவை பிறப்பினால் தோன்றும் இயற்கையான வேறுபாடுகள். தொழில் மற்றும் ஆர்வங்களால் தோன்றும் சமூக வேறுபாடுகள்; இடம், காலம் ஆகியவற்றில் தோன்றும் கலாச்சார வேறுபாடுகள்; மதிப்புகள், விருப்பங்களினால் தோன்றும் மனவியல் வேறுபாடுகள்என்று வேறுபடும்.
ஆனால், அவை ஒருவரது செயல்பாடுகளில் வெளிப்படுபவை, இரண்டாம் பட்சமானவை. பிறப்பினால் நாம் அனைவரும் சமமானவர்களே.
எல்லா மக்களும் அடிப்படையில் சமம் என்ற கொள்கைக்குப் பல அர்த்தங்கள் உண்டு.
முதலாவதாக, மக்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களானாலும், எம்மொழியைப் பேசினாலும், எந்தக் கருத்தை வெளியிட்டாலும், எந்த நம்பிக்கை வைத்திருந்தாலும் அவர்கள் எந்த இடத்திலும் எப்போதும் சமமானவர்களே.
மக்கள் பிறரோடு கொள்ளும் உறவுகளில் இதை உணர்ந்து மதித்து நடக்கவேண்டும்.
இரண்டாவதாக, வாய்ப்புகளில் சமத்துவம் கொடுக்கவேண்டும். ஒருவருக்கு ஒருவர் இடையே உள்ள வேறுபாடுகளை இது மறக்கவில்லை. ஆனால் மக்கள் தங்களை வாழ்வித்துக் கொள்வதற்கான உரிமையை இது வலியுறுத்துகிறது.
சமுதாய அமைப்புகள் மற்றும் சமூக நிறுவனங்களில் தங்கள் திறமைக்கேற்ற அளவு பணியாற்றவும், அவற்றில் பங்கேற்கவும் மக்களுக்குச் சுதந்திரம் வேண்டும்.
மூன்றாவதாக, சமுதாயத்தில் பங்கீட்டுச் சமத்துவம் வேண்டும். சமூகத்தின் செல்வ வளங்களிலும், கிடைக்கும் சேவைகளிலும் எல்லோருக்கும் சமமான பங்கீடு இருக்கவேண்டும்.
ஊனமுற்றோர், வசதி குறைவானோர் இவர்களுக்கு முன்னுரிமை உண்டு.
குறிப்பாக ஏழை, பணக்காரர் இடையே உள்ள வேற்றுமை ஏற்கமுடியாத அளவு அதிகரித்திருந்தால் அப்போது இதற்குச் சிறப்புக் கவனம் வேண்டும்.
இறுதியாக சமத்துவம் என்பது சலுகைகள் மட்டுமல்ல, பொறுப்புகளும் கூட. ஒவ்வொருவரும் தமது திறமைக்கு ஏற்ற விதத்தில் பொது நன்மைக்குப் பாடுபடுவது அவரது தார்மீகக் கடமையாகிறது.